நீலகிரி மாவட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க 35 சதவீதம் மானிய கடன்-கலெக்டர் அம்ரித் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க 35 சதவீதம் மானிய கடன் வழங்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

Update: 2023-05-26 19:00 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க 35 சதவீதம் மானிய கடன் வழங்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

வங்கி மூலம் கடன்

சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் அதிகப்படியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த தொழில் முனைவோர்கள் பங்கேற்று சுயமாக தொழில்களை தொடங்கவும் மற்றும் ஏற்கனவே துவங்கிய தொழில்களை விரிவாக்கம் செய்யவும் 35 சதவீத மானியத்துடன் கூடிய அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சேம்பியன் திட்டம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியும், ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரத் தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம். இதன்படி தேயிலை தொழிற்சாலை, பேக்கரி பொருட்கள் தயாரித்தல், சாக்லெட் தயாரித்தல், சணல் பைகள் தயாரித்தல், அறைக்கலன்கள் தயாரித்தல், காரட் கழுவும் எந்திரம் அமைத்தல், உடற்பயிற்சி கூடம், ஆட்டோ மொபைல் பழுது நீக்கும் மையம், ஆட்டோ மொபைல் வீல் அலைன்மெண்ட் மையம், அழகு நிலையம், காங்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ், வாடகை வாகனம், மீட்பு வாகனம், மொபைல் கிரேன், மொபைல் கேட்டரிங், டிப்பர் லாரி மற்றும் வியாபாரத் தொழில்களுக்கு கடன் பெறலாம். மானிய உச்சவரம்பு ரூ.1½ கோடி வரை பெறலாம். மேலும் கடனை திரும்ப செலுத்தும் காலம் வரையில் 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தொழில்முனைவோர்களுக்கு வங்கி மூலம் கடன்பெற்று தொழில் தொடங்கவும் அல்லது சொந்த முதலீட்டில் தொழில் தொடங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவை சார்ந்த தனி நபர்கள், பங்குதாரர் நிறுவனங்கள், ஒருநபர் கம்பெனி மற்றும் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கல்வி தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதிகபட்ச வயது வரம்பு 55 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 134, எல்க் ஹில் சாலை, ஊட்டி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.ஆகவே தகுதியும், ஆர்வமும் உள்ள தொழில் முனைவோர்கள் அண்ணல் அம்பேத்கார் பிசினஸ் சேம்பியன் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்