காளை விடும் விழாவில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டி தூக்கி வீசியதில் 35 பேர் காயம்
பிச்சாநத்தம் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டி தூக்கி வீசியதில் 35 பேர் காயம் அடைந்தனர்.
அணைக்கட்டு
பிச்சாநத்தம் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டி தூக்கி வீசியதில் 35 பேர் காயம் அடைந்தனர். மேலும் 25 மோட்டார்சைக்கிள்களும் சேதம் அடைந்ததோடு காளைகளுக்கும் காயம் ஏற்பட்டது.
காளை விடும் விழா
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் தொடர்ந்து காளை விடும் விழா நடைபெற்று வருகின்றது. அதன்படி ஒடுகத்தூரை அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தில் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நேற்று நடந்தது. முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் அறிவித்ததால் பரிசை தட்டிச் செல்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து 300 காளைகள் போட்டியில் கலந்து கொள்ள இரவே அவற்றின் உரிமையாளர்கள் அழைத்து வந்து விட்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 6 மணி முதல் கால்நடை மருத்துவர் விணில் குமார் காளைகளை பரிசோதனை செய்து தகுதியானவைகளுக்கு அனுமதி வழங்கினார்.
காலை 10 மணிக்கு வேலூர் தணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார்கள், வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி முத்து ஆகியோர் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து வாடி வாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.
35 பேர் படுகாயம்
சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் ஆரவாரம் செய்து காளைகளை உற்சாகப்படுத்தினர். அப்போது காளைகள் முட்டியதில் 35 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காயம் அடைந்தவர்களை சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம் அமைக்கப்பட்ட இடம் போதிய இடவசதி இல்லாததால் காயம் பட்டவர்களை உடனுக்குடன் சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் சிரமப்பட்டனர்.
இதனால் காயம்பட்டவர்களின் உறவினர்களுக்கும் டாக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பார்வையாளர்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் காளை ஓடும் பாதையிலேயே வாகனங்களை நிறுத்தியதால் வேகமாக ஓடிய காளைகள் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 25 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன, காளைகளுக்கும் பலத்த காயம்ஏற்பட்டது. விழா தொடங்கியது முதல் இறுதிவரை பரபரப்பாக இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.