வாலிபரிடம் ரூ.35½ லட்சம் மோசடி

எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் விற்பனை உரிமை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.35½ லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-07-15 19:15 GMT

எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் விற்பனை உரிமை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.35½ லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்

நாகை மாவட்டம் தெற்குபொய்கைநல்லூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மகன் சண்முகசுந்தரம் (வயது 30). இவர், எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஷோரூம் நடத்துவதற்காக ஒரு தனியார் கம்பெனியில் விற்பனை உரிமைக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து அடையாளம் தெரியாத 2 பேர் செல்போன் மூலம் சண்முகசுந்தரத்திடம் ஷோரூம் தொடர்பாக பேசி, விவரங்களை கேட்டுள்ளனர்.

ரூ.35½ லட்சம்

மேலும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் கேட்டுப்பெற்றுள்ளனர். சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த மர்ம நபர்கள் சண்முகசுந்தரத்தை தொடர்பு கொண்டு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஷோரூம் வைப்பதற்கான உரிமம்(டீலர்ஷிப்) வேண்டும் என்றால் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதை நம்பிய சண்முகசுந்தரம் பல்வேறு தவணைகளாக ரூ.35 லட்சத்து 55 ஆயிரம் வரை ஆன்லைனில் கட்டி உள்ளார்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இந்த நிலையில் பணம் கட்டி பல நாட்கள் ஆகியும் ஷோரூம் தொடர்பான எந்த நடவடிக்கையும் இல்லாததால் அந்த மர்ம நபர்களை சண்முகசுந்தரம் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர்களின் செல்போன் எண்கள் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சண்முகசுந்தரம் நாகை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் விற்பனை உரிமம் வாங்கி தருவதாக கூறி சண்முகசுந்தரத்தை ஏமாற்றி ரூ.35½ லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்