லாட்டரி சீட்டுகள் விற்ற 34 பேர் கைது
கோவை மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 34 பேரை கைது செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 34 பேரை கைது செய்தனர்.
போலீஸ் திடீர் சோதனை
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அனைத்து உட்கோட்ட போலீசாரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த 34 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
1,601 லாட்டரி சீட்டுகள்
கைதானவர்களிடம் இருந்து 1601 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.