கொளத்தூரில் 33 புதிய திட்ட பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.95 கோடி மதிப்பீட்டிலான 33 புதிய திட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-10-21 00:12 GMT

சென்னை,

கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் பார்வையாளர் மாடம், நடைபாதை, இறகுபந்து கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து விளையாட்டு திடலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, திரு.வி.க நகர் 8-வது தெருவில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 54 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சிறுவர் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அவர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, அகஸ்தியர் அறக்கட்டளை சார்பில் கலைஞர் நூற்றாண்டு கட்டணமில்லா உயர் சிகிச்சை வசதிகளுடன் கூடிய கண் சிகிச்சை மையத்தையும், அக்கட்டிடத்தின் முதல் தளத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தையல் பயிற்சி மையத்தையும் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

உதவித்தொகை

பின்னர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், பயனாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாவு அரவை எந்திரம், காது கேட்டும் கருவி, தையல் எந்திரம் என 55 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து, ஜி.கே.எம். காலனி 27-வது தெருவில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி மையத்தை 5 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, சென்னை நடுநிலைப்பள்ளியில் 9 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மதிய உணவு திட்ட மையத்தை மேம்படுத்தும் பணி, பல்லவன் சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சாலையோர பூங்காவில் 26 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், இதர பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்தும் பணி.

33 பணிகள்

திரு.வி.க. நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள பெண்கள் உடற்பயிற்சி கட்டிடத்தை 17 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, எல்.சி.1 பூங்காவில் 37 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக மழைநீர் சேகரிக்கும் குளம் அமைத்தல் மற்றும் செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கும் பணி உள்பட 33 பணிகளுக்கு மொத்தம் 5 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாட்டு பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி, கிரிராஜன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, அ. வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நகர் ஊரமைப்பு இயக்குனர் பி.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்