நெல்லையில் 33 கி.மீ. தூரத்துக்கு அமைகிறது, மேற்கு புறவழிச்சாலை-முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

தென்காசி, பாபநாசம் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நெல்லையில் 33 கி.மீ. தூரத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் விஷ்ணு நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2022-09-13 19:51 GMT

தென்காசி, பாபநாசம் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நெல்லையில் 33 கி.மீ. தூரத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் விஷ்ணு நேற்று ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

நெல்லை மாநகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.370 கோடி மதிப்பில் நெல்லை மேற்கு புறவழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான நில எடுப்பு பணிகள் நடந்து வருவதாக நெல்லையில் கடந்த 8-ந் தேதி நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிலையில் மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று நெல்லை-கன்னியாகுமரி சாலையில் ஜோதிபுரம் பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் இந்த திட்டம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முக்கிய நகரங்கள்

அதன்பிறகு கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-

நெல்லைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்துக்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்துள்ளோம்.

நெல்லை தேசிய நெடுஞ்சாலை எண் 7-ல் தாழையூத்தில் தொடங்கி பொன்னாக்குடி வரை சென்று முடியும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கைக்கு அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதில் மாநில நெடுஞ்சாலைகளான சங்கரன்கோவில், தென்காசி, பொட்டல்புதூர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 நெடுஞ்சாலைகள் இணைக்கப்படுகிறது. இந்த புறவழிச்சாலை திட்டப்பணிகள் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.

உயர்மட்ட பாலம்

இந்த திட்டம் நெல்லை மாநகருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். தென்காசி, குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு போன்ற முக்கிய நகரங்களையும் இணைக்கும் விதமாக இந்த சாலை அமைய உள்ளது. இந்த புறவழிச்சாலையின் மொத்த நீளம் 33 கிலோ மீட்டர். இந்த திட்டப்பணிகளுக்காக 14 வருவாய் கிராமங்களில் இருந்து 96.77 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. பெரும்பாலும் அரசு புறம்போக்கு நிலங்களே அதிகளவில் கையகப்படுத்தப்படுகிறது.

தற்போது 30 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் நில எடுப்பு பணிகள் முடிவடைந்து, சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். திட்டப்பணிகளை 2 ஆண்டுகளில் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலையின் குறுக்கே பச்சையாற்றின் மேல் ஒரு உயர்மட்ட பாலம் மற்றும் 2 ரெயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் லிங்குசாமி, உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம், தாசில்தார் ஆவுடையப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்