காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 32 பேர் காயம்

பள்ளிகொண்டாவில் நடந்த காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டி 32 பேர் காயமடைந்தனர். கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

Update: 2023-04-03 11:55 GMT

காளைவிடும் விழா

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா யாதவர் வீதியில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், பழனிமுத்து மற்றும் விழா குழுவினர் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

போட்டியில் கலந்து கொள்ள ஆந்திர மாநிலம் நெல்லூர்பேட்டை மற்றும் ஜோலார்பேட்டை, பர்கூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, பரதராமி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 250 காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனைக்கு பிறகு வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து ஓடின.

32 பேர் காயம்

அப்போது பாதைகளில் நின்றிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 32 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இளைஞர்கள் விசிலடித்து மாட்டின் மீது கையை போட்டு உற்சாகப்படுத்தி ஓட வைத்தனர். முதல் பரிசாக ரூ.77 ஆயிரத்து 777, இரண்டாம் பரிசாக 55 ஆயிரத்து 555 உள்ளிட்ட 51 பரிசுகள் வழங்கப்பட்டன.

பார்வையாளர்கள் அதிக அளவில் கூடியதால் காளைகள் ஓடுவதற்கு வழிதெரியாமல் திருவிழா கடைகளுக்குள்ளும், பிரியாணி இருந்த குண்டாக்கள் மீதும் முட்டி மோதியது.

போலீஸ் தடியடி

பள்ளிகொண்டா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் வெங்கடேசன் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் வாலிபர் ஒருவரை ஒரு கும்பல் தூக்கிச் சென்று சரமாரியாக தாக்கினர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

வருவாய் ஆய்வாளர் ரஜினி, கிராம நிர்வாக அலுவலர் ஞானசுந்தரி, உதவியாளர்கள் பிரான்சிஸ், வேலாயுதம் உள்ளிட்டோர் விழாவை கண்காணித்தனர்.

வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விழாவை கண்காணித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்