குரோம்பேட்டையில் ஏரியை ஆக்கிரமித்து கட்டிய 314 வீடுகளை 6 மாதத்துக்குள் அகற்ற வேண்டும்

குரோம்பேட்டையில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 314 வீடுகளை 6 மாதத்துக்குள் அகற்ற வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2023-09-11 21:16 GMT

சென்னை,

சென்னை குரோம்பேட்டை வீரராகவன் ஏரியை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாகவும், இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் வீரராகவன் ஏரியில் கலப்பதால் ஏரி மாசு அடைந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சாலமன்ராஜா என்பவர் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், 'வீரராகவன் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. டெங்கு, மலேரியா போன்ற கொடூரமான நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மழைநீர் வடிகால் மூலம் கழிவுநீர் இந்த ஏரியில் கலக்கிறது.

துர்காநகர், செல்லியம்மன் நகர் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகால் வழியாக இந்த ஏரிக்கு செல்கிறது. இதை தடுக்க தாம்பரம் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வீரராகவன் ஏரியில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மனுவை விசாரித்த தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

வீரராகவன் ஏரியை 314 பேர் ஆக்கிரமித்துள்ளது கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

துர்காநகர், செல்லியம்மன் நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீர் வடிகால் மூலம் ஏரியில் கலக்காமல் இருப்பதை தாம்பரம் மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு குளம் மற்றும் ஏரிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் சட்டத்தின் கீழ் ஏரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

வேறு இடத்தில் அமர்த்த நடவடிக்கை

உதவி கலெக்டர், தாசில்தார், தாம்பரம் மாநகராட்சி, தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு மற்றும் மேம்பாட்டு வாரியம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இணைந்து ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் அமர்த்துவதற்கும், மாசு இல்லாத வகையில் ஏரியை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்