ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி போலீஸ்காரர் உள்பட 31 பேர் காயம்
உப்பிலியபுரம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் உள்பட 31 பேர் காயம் அடைந்தனர்.
உப்பிலியபுரம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் உள்பட 31 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
உப்பிலியபுரம் அருகே டி.மங்கப்பட்டிபுதூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஆத்தூர், புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், ராசிபுரம், நாமக்கல், ஆத்தூர், துறையூர், முசிறி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 650 காளைகள் கலந்து கொண்டன.
இதில் 200 வீரர்கள் பங்கேற்றனர். முன்னதாக அவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் தகுதிவாய்ந்தவர்கள் மட்டும் காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
31 பேர் காயம்
முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை யாரும் பிடக்கவில்லை. அதன்பின் மற்றகாளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை வீரர்கள் போட்டி, போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் தன்னை பிடிக்க வந்த வீரர்களை முட்டி தள்ளியது. இதில் காளைகள் முட்டியதில் நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ், பெரிய கோம்பையைச் சேர்ந்த கலைச்செல்வன், முசிறி வடக்குப்பட்டியை சேர்ந்த போலீஸ்காரர் பாலகிருஷ்ணன் உள்பட 31 பேர் காயம் அடைந்தனர்.
இதில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா, டேபிள், ரொக்கப்பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டையொட்டி முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஷ்மின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.