மே 30-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம்
தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி வருகிற மே 30-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
திருத்துறைப்பூண்டி:
தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி வருகிற மே 30-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
பேட்டி
திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும்.
வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.2.72 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் ரூ.2 லட்சம் கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்க வேண்டும்.
நாடாளுமன்றம் முற்றுகை
வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரம் என அறிவிக்க வேண்டும். வேலை அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் தொழிலாளர்களுக்கு தாமதமின்றி அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி வருகிற மே மாதம் 30-ந்தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இந்த போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து 1,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 100 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.