விண்ணப்பங்களை பெற 309 இடங்களில் முகாம்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்களை பெற 309 இடங்களில் சிறப்பு முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிவகாசி தாசில்தார் லோகநாதன் தெரிவித்தார்.
சிவகாசி,
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்களை பெற 309 இடங்களில் சிறப்பு முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிவகாசி தாசில்தார் லோகநாதன் தெரிவித்தார்.
மகளிர் உரிமை திட்டம்
தமிழக அரசு சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து வீடுகளுக்கும் தன்னார்வ தொண்டர்கள் மூலம் நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைத்து தன்னார்வ தொண்டர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
309 முகாம்
இதுகுறித்து சிவகாசி தாசில்தார் லோகநாதன் கூறியதாவது:- சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் 143 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளின் அருகிலும், மேலும் தேவைப்படும் இடங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் அமைத்து பெண்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 309 இடங்களில் முகாம்கள் அமைத்து பெண்களுக்கு எவ்வித இடையூறு இன்றி விண்ணப்பங்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேவைப்படும் பட்சத்தில் முகாம்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். பெண்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எங்கு? எப்போது கொடுக்க வேண்டும் என்ற விவரம் டோக்கனில் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படும். அதனால் குறிப்பிட்ட நேரத்தில் கூட்ட நெரிசல் இன்றி விண்ணப்பங்களை கொடுத்துவிட்டு செல்லலாம். விண்ணப்பம் கொடுக்க தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ள இது வாய்ப்பாக இருக்கும். ஒவ்வொரு முகாமிலும் தினமும் அதிகபட்சமாக 100 பேரிடம் விண்ணப்பங்கள் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.