கடலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை 308 பேர் கைது

கடலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 308 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-16 18:45 GMT

மின்வாரியத்தில் 22.2.2018-ல் தொழிற்சங்கங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தம் படி 6.1.1998 முதல் இன்று வரை பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் செம்மண்டலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், மின்ஊழியர் மத்திய அமைப்பினர் (சி.ஐ.டி.யு.) அறிவித்து இருந்தனர்.

முற்றுகை போராட்டம்

அதன்படி மறியல் போராட்டம் நடத்துவதற்காக மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் செம்மண்டலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு திரண்டனர். தொடர்ந்து அவர்கள் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் பன்னீர்செல்வம், ஜெயராமன், கலியமூர்த்தி, தமிழ்வாணன், முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் தேசிங்கு, மாநில செயற்குழு ரவிச்சந்திரன், வீரமணி, மாவட்ட பொருளாளர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கைது

இதில் துணை தலைவர்கள் ஜெயக்குமார், ராஜேந்திரன், சுப்பிரமணியன், கண்ணன், இணை செயலாளர்கள் ஆறுமுகம், கோவிந்தராசு, கோவிந்தசாமி, ராஜகோபால், தனுசு, சிவபெருமான் உள்பட மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 308 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்