300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப் படுகிறது

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படுவதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2023-07-31 18:59 GMT

அமைச்சர் ஆய்வு

ராணிப்பேட்டை பாரதி நகரில் சுற்றுலாத் துறை வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஓட்டலில் சுறறுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தங்கும் அறைகள், உணவகம், உணவின் தரம் மற்றும் இதர கட்டிடங்களை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக சுற்றுலா தலங்களை செம்மைப்படுத்துவது மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் இயங்கி வரும் ஓட்டலில் பயணியர் தங்கும் அறைகள் அனைத்தும் நவீன முறையில் மாற்றியமைத்தல், உணவகங்கள் மற்றும் விடுதிகளை மேம்படுத்துதல், பழைய அறைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேம்படுத்தும் பணி

உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு விருந்தினர்களுக்கு தலை வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டு வருகிறது. இதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதோடு வேலை வாய்ப்பையும் அதிகரிக்க முடியும்.

கடந்த நிதியாண்டில் 16 லட்சம் சுற்றுலாபயணிகள் தமிழகத்திற்கு வருகைதந்துள்ளனர். இந்த நடப்பாண்டில் 3 மாதத்தில் மட்டும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக 300 சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது கலெக்டர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மண்டல மேலாளர் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ராமன், மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் முகமது அமீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்