300 கிராம் தங்க பிஸ்கெட்டுகளை பறித்து சென்ற கும்பல்

துபாயில் இருந்து வேப்பூருக்கு தொழிலாளி கடத்தி வந்த 300 கிராம் தங்க பிஸ்கெட்டுகளை பறித்துச் சென்ற கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-08-17 19:29 GMT

ராமநத்தம், 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள தே.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் பாலையா (வயது 38), தொழிலாளி. துபாயில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 14-ந் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார்.

மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய பாலையா, அங்கிருந்து கால் டாக்சி மூலம் விருத்தாசலம் அடுத்த பேரளையூரில் உள்ள தனது மாமியார் ராணி வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் மாமியாரிடம் ஒரு பெட்டியை கொடுத்து, யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக வைக்கும்படி கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

பெட்டி

இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாழை கிராமத்தை சேர்ந்த குமரேசன்(30) என்பவர் தனது நண்பர்கள் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அன்பழகன் மகன் சின்னராசு, திருச்சி கல்நாககோட்டை தங்கவேல் மகன் விக்னேஷ், ஷாகுல்அமீது, கம்மாபுரம் கீனனூரை சேர்ந்த ரங்கநாதன் மகன் செல்வமணி, திருச்சியை சேர்ந்த இப்ராஹிம், ஜாஹீர், உசேன், ஜெகன் ஆகியோருடன் 2 கார்களில் பாலையா வீட்டுக்கு வந்து அவரது மனைவி முத்துலட்சுமியிடம் பாலையா கொண்டு வந்த பெட்டி குறித்து விசாரித்தார். அப்போது முத்துலட்சுமி தனது கணவர் கடந்த சில நாட்களாக வீட்டுக்கே வரவில்லை என அவர்களிடம் தெரிவித்தார்.

உடனே அவர்கள் தாங்கள் ஒரு பெட்டியை, பாலையாவிடம் கொடுத்து அனுப்பியதாகவும், அந்த பெட்டி தங்களுக்கு வேண்டும் எனவும் தெரிவித்தனர். அப்போது அவர், தனது தாய் ராணியை செல்போனில் தொடர்பு கொண்டு பெட்டி குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர், பாலையா தன்னிடம் ஒரு பெட்டியை கொடுத்து விட்டு சென்றதாக கூறினார்.

வாக்குமூலம்

இதை அருகில் இருந்து கேட்ட குமரேசன், அந்த பெட்டியை தே.புடையூருக்கு கொண்டு வரும்படி கூறினார். அதன் பேரில் ராணி அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்ததும் அதனை பறித்துக் கொண்ட குமரேசன், அதில் இருந்த தங்க பிஸ்கெட்டுகளை தனது நண்பர்களான இப்ராஹிம், ஜாஹீர், உசேன், ஜெகன் ஆகியோரிடம் கொடுத்து அனுப்பி விட்டு, பாலையாவை தேடினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராணி, இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வேப்பூர் போலீசார் விரைந்து வந்து குமரேசன், சின்னராசு, விக்னேஷ், ஷாகுல்அமீது, செல்வமணி ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதில் கைதான குமரேசன் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தங்க பிஸ்கெட்டுகள்

துபாயில் மீன்பிடி வேலைக்கு சென்ற எனக்கு அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் துபாயில் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி, அதனை தமிழகத்திற்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்று வந்தேன். இந்நிலையில் கடலூர் மாவட்டம் தே.புடையூரை சேர்ந்த பாலையா என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவருடன் சேர்ந்து தங்கம் கடத்த திட்டமிட்டேன். அதன்படி கடந்த 14-ந் தேதி பாலையாவிடம் 100 கிராம் எடை கொண்ட 3 தங்க பிஸ்கெட்டுகளை கொடுத்து, மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லும்படியும், அங்கு எனது நண்பர்கள் வந்ததும் அவர்களிடம் கொடுத்துவிடும்படி கூறி அனுப்பி வைத்தேன்.

4 பேருக்கு வலைவீச்சு

ஆனால் விமான நிலையத்தில் இறங்கியதும், பாலையா தங்க பிஸ்கெட்டுகளை எனது நண்பர்களிடம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். அதனால் அதனை வாங்கி செல்வதற்காக வந்த நாங்கள், தங்க பிஸ்கெட்டுகளை ராணியிடம் இருந்து பறித்து, அதனை விற்பனை செய்வதற்காக இப்ராஹிம் உள்ளிட்டோரிடம் கொடுத்து அனுப்பினேன். அதன் பிறகு பாலையாவை தேடிக் கொண்டிருந்த போது தான் போலீசில் சிக்கிக் கொண்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தவரும் கைது

அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க பிஸ்கெட்டுகளுடன் தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே மேற்கண்ட சம்பவத்தை அறிந்து வெளியூருக்கு தப்பிச் செல்வதற்காக பெண்ணாடம் பஸ் நிறுத்தத்தில் பதுங்கியிருந்த பாலையாவையும் நேற்று வேப்பூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்