வடக்கு வெள்ளூரில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பணை திறப்பு: 300 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்

வடக்கு வெள்ளூரில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பணை திறக்கப்பட்டது. இதன் மூலம் 300 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

Update: 2023-09-01 18:45 GMT

கம்மாபுரம் ஒன்றியம் வடக்குவெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 96 ஏக்கர் பரப்பளவு கொண்ட மூப்பன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு என்.எல்.சி. அனல்மின் நிலையம்-1 விரிவாக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர் வருகிறது. ஆனால் மூப்பன் ஏரி, சரிவர தூர்வாரப்படாததால் தண்ணீர், வடக்கு வெள்ளூர், ரோமாபுரி வாய்க்கால், பரவனாறில் வீணாக கடலில் கலக்கிறது. இதனால் வடக்கு வெள்ளூர் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

இதையடுத்து விவசாயிகள், வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்தில் வடக்கு வெள்ளூரில் தடுப்பணை கட்டப்பட்டது.

இந்த நிலையில் அதனை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், குமரன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் வடக்கு வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி வேல்முருகன், மாவட்ட கவுன்சிலர் சின்ன ரகுராமன், ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன் மற்றும் வசந்தன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு தடுப்பணை அமைக்கப்படுவதன் மூலம் வடக்கு வெள்ளூர் மற்றும் வெளிக்கூனங்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்