ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை-ரூ.5 லட்சம் திருட்டு
ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை-ரூ.5 லட்சம் திருட்டுபோனது.
சொந்த ஊருக்கு சென்றார்
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 70). இவர் பாய்லர் ஆலையில் ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் கடந்த 12-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்திற்கு சென்றார்.பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவும் உடைக்கப்பட்டிருந்தது.
நகை-பணம் திருட்டு
இதையடுத்து, வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து அறிவழகன் உறையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.