கள்ளக்குறிச்சி அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து 30 பேர் காயம்

கள்ளக்குறிச்சி அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-09-01 16:58 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூர் கிராமத்தை சேர்ந்த 29 பேர், ஒரு தனியார் பள்ளி வேனில் ஆலத்தூர் கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டனர். கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்தூர் ஏரிக்கரை பகுதியில் வந்தபோது, கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்ற டாரஸ் லாரி, வேனை முந்தி சென்றது. அப்போது எதிரே ஒரு வாகனம் வந்ததால் விபத்து ஏற்படாமல் இருக்க வேனை டிரைவர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

30 பேர் காயம்

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ராயப்பனூரை சேர்ந்த இளையராஜா மனைவி ஜமுனா (வயது 30), தனவேல் மனைவி சசிகலா (37), சுபாஷ் சந்திரபோஸ் மனைவி திவ்யபாரதி, மேகலா, லீலாவதி, ஜெயலட்சுமி, சிவலிங்கம், இளையராஜா, இளையராஜா மகன் தஸ்வின் (6), மகள் அஷிதா (3) மற்றும் டிரைவர் உள்பட 30 பேர் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்