நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் 30 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் 30 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. மேலும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சாரல் மழை
மாண்டஸ் புயல் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக கொல்லிமலையில் 27 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொல்லிமலை-27, எருமப்பட்டி-10, நாமக்கல் -7, மங்களபுரம்-7, மோகனூர்-7, கலெக்டர் அலுவலகம்-5, பரமத்திவேலூர்-5, சேந்தமங்கலம்-2, புதுச்சத்திரம்-2. திருச்செங்கோடு-1.
இந்த மழை காரணமாக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரிகளில் 30 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 9 ஏரிகள் 75 சதவீதமும், 6 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலும், 5 ஏரிகள் 25 சதவீதத்திற்கு மேலும், 6 ஏரிகள் 25 சதவீதத்திற்கு உள்ளும் நிரம்பி உள்ளன. 23 ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை.
பனிப்பொழிவு
இது ஒருபுறம் இருக்க நேற்று காலையில் நாமக்கல் நகரில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. அருகில் செல்பவர்கள் கூட தெரியாத அளவுக்கு பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நடைபயிற்சி செல்வோர், அதிகாலையில் எழுந்து பணிக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். நடைபயிற்சி செல்வோர் குல்லா, சொட்டர் அணிந்து செல்வதை காணமுடிந்தது.
காலை 8 மணி அளவில் கூட வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு மெதுவாக வாகனங்களை ஓட்டி சென்றனர். காலை 8 மணிக்கு மேல் சூரியனின் கதிர் சுட்டெரிக்க தொடங்கியதும் பனிமூட்டம் மெதுவாக மறைந்தது. புகைமூட்டம் போல் காட்சி அளித்த பனியால் அனைத்து தரப்பினரும் குளிரில் நடுங்கினர்.