காய்கறி, பழ கடைகளுக்காக ரூ.30 கோடியில் வணிக வளாகம்

திருவண்ணாமலையில் காய்கறி, பழ கடைகளுக்காக ரூ.30 கோடியில் வணிக வளாகம் கட்டப்படும் என்று நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-03-27 16:57 GMT


திருவண்ணாமலையில் காய்கறி, பழ கடைகளுக்காக ரூ.30 கோடியில் வணிக வளாகம் கட்டப்படும் என்று நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகரமன்ற கூட்டம்

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நகரமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் ராஜாங்கம், பொறியாளர் நீலேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் முருகேசன் வரவேற்றார்.

கூட்டத்தில் நகரமன்ற வார்டு உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் பேசுகையில், பல பகுதிகளில் பாதாள சாக்கடை, கழிவுநீர் கால்வாய் சாலை, குடிநீர் மின்மோட்டார்கள் பழுதடைந்ததை சரி செய்யவில்லை.

நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்வதில்லை என்று கூறினர்.

வாக்குவாதம்

அப்போது தங்கள் வார்டுகளில் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து பேசுங்கள் மற்ற வார்டுகள் குறித்து பேச வேண்டாம் என்று தி.மு.க. உறுப்பினர் ஒருவர் கூறியதால் அ.தி.மு.க.- தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நகர மன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் கூறுகையில், 39 வார்டுகளிலும் பாரபட்சமின்றி பணிகள் நடைபெற்று வருகிறது.

வார்டுகளில் எந்த குறைகள் இருந்தாலும் உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தால் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சாலை மற்றும் கால்வாய் பணிகள் தரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

தொடர்ந்து வார்டு உறுப்பினர் தாங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்தனர்.

வணிக வளாகம்

கூட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமான காந்தி நகரில் உள்ள காலியிடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தரைத்தளத்தில் காய்கறி மற்றும் பழக்கடைகளும், முதல் தளத்தில் 121 பூக்கடைகளும் என 249 கடைகள் கொண்ட வணிக வளாகம் ரூ.30 கோடியே 10 லட்சத்தில் கட்டுவதற்கு திட்ட அறிக்கை அனுப்புவது என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்த 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்