சிதம்பரத்தில் ஒரே நாளில் கொட்டிய 30 செ.மீ. மழை 15,500 ஏக்கர் பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது

சிதம்பரத்தில் ஒரே நாளில் 30 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் 15,500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

Update: 2022-11-12 18:45 GMT

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த சுழற்சியானது, ஆழ்ந்த காற்றழுத்த சுழற்சி பகுதியாக நிலவுவதால் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கடந்த 10-ந்தேதி இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழையானது இடைவிடாது நேற்று முன்தினம் பகல் முழுவதும் கொட்டி தீர்த்தது.

பின்னர் மாலையில் சிறிது நேரம் ஓய்ந்திருந்த நிலையில், இரவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் மின்தடையும் செய்யப்பட்டது. பேய் மழைபோல் கொட்டிய இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் சிதம்பரம் மட்டுமின்றி சி.தண்டேஸ்வரநல்லூர், காட்டுமன்னார்கோவில், திருநாரையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளையும் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

சுமார் 24 மணி நேரத்திற்கும் மேல் பெய்த அடைமழையால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், அண்ணாமலை நகர், புவனகிரி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் புகுந்ததால், அங்கு வசித்த மக்கள் தூக்கத்தை தொலைத்து, தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நேற்று அதிகாலை முதல் மழை முற்றிலும் ஓய்ந்தது. மேலும் பகலில் மேக கூட்டங்கள் கலைந்து வெயில் சுட்டெரித்ததால், குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் மழைநீர் வடிய தொடங்கி உள்ளது.

சாலையின் குறுக்கே பள்ளம்

இதேபோல் கடலூர் மாநகராட்சி பகுதியில் பெய்த கனமழையால் மஞ்சக்குப்பம் நேரு நகர் விரிவு, திருமலை நகர், பவுன் நகர், ஸ்டேட் வங்கி காலனி, புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதில் நேரு நகர் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்காக அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு, புதிதாக குழாய் அமைக்கப்பட்டு மழைநீரை வெளியேற்றும் பணி நடந்தது. கடலூா் தேவனாம்பட்டினம், தாழங்குடா பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலைகள் கரையில் மோதியதில் மண் அாிப்பு ஏற்பட்டது.

மேலும் பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி, வேப்பூர் பண்ருட்டி என மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் மாவட்டத்தில் சுமார் 15,500 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்தது. மேலும் 120 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த உளுந்து பயிர்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், அதனை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

30 செ.மீ. மழை

மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 30.7 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 6.8 செ.மீ. மழையும் பெய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்