வாகன சோதனையில் சிக்கிய 3 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

அரியலூரில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் வாகன சோதனையில் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-05-26 17:35 GMT

தனிப்படை அமைப்பு

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 26). இவர் அரியலூர் வண்ணாங்குட்டை டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சதீஷ்குமார் அரியலூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், ராஜவேல் தலைமையிலான போலீசார் வாரணவாசி மருதையாறு பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

3 வாலிபர்கள் கைது

அப்போது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் 3 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து விசாரித்தபோது, அவர்கள் அளித்த பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அரியலூர் ராஜீவ் நகரை சேர்ந்த வெங்கடேசன் மகன் நித்தியானந்தம்(26), பூனைக்கன்னித் தெருவை சேர்ந்த பாலையா மகன் கார்த்திகேயன்(29), கல்லக்குடி கிராமத்தை சேர்ந்த கண்னையன் மகன் சூரியபிரகாஷ்(24) என தெரியவந்தது.

மேலும் அவர்கள் கடந்த மாதம் 7-ந்தேதி அரியலூர் பல்லேரி கரை அருகே நடந்து சென்ற செல்வி என்ற பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் 6 பவுன் தங்க சங்கிலி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மேற்கண்ட 3 பேர் மீதும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடைபெற்ற சங்கிலி பறிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்