நகை பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
தக்கலை பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 17 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
தக்கலை,
தக்கலை பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 17 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
நகை பறிப்பு சம்பவங்கள்
குமரி மாவட்டத்தில் தக்கலை, கொற்றிக்கோடு, நித்திரவிளை போன்ற பகுதிகளில் சமீப காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக தக்கலை அருகே மணலியில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் வந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலியை 2 பேர் பறித்து சென்றனர். பெருஞ்சிலம்பு பகுதியில் ஆற்றில் குளிக்க சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலையில் தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் தனிப்படை போலீசார் பரைக்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
கேரள வாலிபர்கள்
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த மன்சூர் மகன்கள் செய்யதலி (வயது25), மாகின் (21) மற்றும் ஷனோபரின் மகன் பர்ஜாய் (20) என்பது தெரிய வந்தது.
இவர்கள் குமரி மாவட்டத்தில் பல இடங்களில் மோட்டார் ைசக்கிளில் சுற்றி திரிந்து திருட்டு, நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
ஜாலியாக செலவு செய்தோம்
நாங்கள் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஜாலியாக ஊர் சுற்றி வந்தோம். பண தேவைக்கு நகை பறிப்பில் ஈடுபடுவோம். இதற்காக முதலில் ஏதாவது ஒரு மோட்டார் சைக்கிள்களை திருடுவோம். அந்த மோட்டார் சைக்கிள்களில் சென்று பெண்களிடம் நகை பறிப்பு, வீடுகளில் திருட்டு ேபான்ற சம்பவங்களில் ஈடுபடுவோம். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை வேறு எங்காவது ஒரு இடத்தில் ேபாட்டு விட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளை திருடி கேரளாவுக்கு தப்பி செல்வோம். பெண்களிடம் திருடப்பட்ட நகைகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு ஜாலியாக ெசலவு செய்து வந்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
17 பவுன் நகைகள் மீட்பு
இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ெகால்லத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 17 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது கேரளாவில் கொல்லம், பத்தனம்திட்டை, காயங்குளம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது மாகின் மீது 10 வழக்குகளும், பர்ஜாஸ், செய்யதலி ஆகியோர் மீது தலா 5 வழக்குகளும் உள்ளன. கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.