கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வி.கைகாட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வி.கைகாட்டி பஸ் நிறுத்த நிழற்குடை அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், வி.கைகாட்டியை சேர்ந்த அருள்மணி(வயது 28), வைப்பம் கிராமத்தை சேர்ந்த நித்தியானந்தம்(26), விக்கிரமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த சவுந்தர்ராஜன்(24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களை சோதனை செய்தபோது, விற்பனைக்காக அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தலா மூன்று பொட்டலங்களில் இருந்த மொத்தம் 45 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.