கடனை திருப்பி கொடுக்காத டிராவல்ஸ் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை
திருவண்ணாமலையில் கடன் வாங்கி திருப்பி கொடுக்காத டிராவல்ஸ் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு உத்தரவிட்டது.
திருவண்ணாமலையில் கடன் வாங்கி திருப்பி கொடுக்காத டிராவல்ஸ் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு உத்தரவிட்டது.
டிராவல்ஸ் உரிமையாளர்
திருவண்ணாமலை தேரடி தெருவை சேர்ந்தவர் பாபு. இவருக்கும் திருவண்ணாமலையில் டிராவல்ஸ் நடத்தி வரும் திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவை சேர்ந்த அண்ணாமலை (வயது 42) என்பவருக்கும் தொழில் ரீதியாக பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு சலுகை விலையில் புதிதாக கார் வாங்குவதற்காக அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், அதனை 2 மாதத்தில் திருப்பி கொடுத்து விடுவதாகவும் கூறி பாபுவிடம் ரூ.6 லட்சத்தை அண்ணாமலை கடனாக வாங்கியுள்ளார்.
பின்னர் பல மாதங்கள் ஆகியும் அண்ணாமலை பணத்தை திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். தொடந்து பணத்தை பாபு கேட்டு வந்ததால் அண்ணாமலை ரூ.6 லட்சத்திற்கான வங்கி காசோலையை பாபுவிடம் வழங்கியுள்ளார்.
ஆனால் அண்ணாமலையின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் அந்த காசோலை திரும்ப வந்தது.
தொடர்ந்து பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதால் அண்ணாமலை மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாபு திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் புகார் மனு அளித்தார்.
3 ஆண்டு சிறை
இந்த மனு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடைபெற்றது. இவ்வழக்கை மாஜிஸ்திரேட்டு கவியரசன் விசாரணை நடத்தினர்.
இதில் பணத்தை பெற்று கொண்டு அண்ணாமலை திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்தது அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து மாஜிஸ்திரேட்டு குற்றம் சாட்டப்பட்ட அண்ணாமலைக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.