லாரி மோதி 3 தொழிலாளர்கள் பலி

ஒரத்தநாடு அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் கூலி தொழிலாளர்கள் 3 பேர் பலியானார்கள்.

Update: 2022-08-24 21:13 GMT
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் தனபால்(வயது 50), அதே ஊரைச்சேர்ந்த கைலாசம் மகன் முருகேசன்(35) மற்றும் புதூர் தாளிவெட்டி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன்(45) ஆகிய 3 பேரும் கூலித் தொழிலாளார்கள். இவர்கள் 3 பேரும் நேற்று மதியம் கோவிலூரில் இருந்து ஒரத்தநாட்டிற்கு ஒரு ஸ்கூட்டரில் சென்றனர். அந்த ஸ்கூட்டரை தனபால் ஓட்டிச் சென்றார். முருகேசன், இளங்கோவன் ஆகிய இருவரும் பின்னால் உட்கார்ந்து இருந்தனர்.

லாரி மோதி 3 பேர் பலி

இவர்கள் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள திருவோணம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் எதிரே வந்த ஒரு லாரி தனபால் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன், இளங்கோவன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய தனபாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

லாரி டிரைவர் தப்பியோட்டம்


இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் விபத்தில் பலியான முருகேசன், இளங்கோவன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். லாரி மோதிய விபத்தில் 3 கூலித்தொழிலாளர்கள் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




Tags:    

மேலும் செய்திகள்