மினிலாரியில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நெய்வேலியில் இருந்து வேலூருக்கு மினிலாரியில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெய்வேலி
நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சரகத்துக்குட்பட்ட வட்டம் 21 பகுதியில் நெய்வேலி தெர்மல் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிலாரி அருகே நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து நழுவ முயன்றனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் விரைந்து சென்று அந்த 2 பேரையும் மடக்கி பிடித்ததுடன், மினிலாரியையும் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது மினிலாரியில் 3 டன் எடையிலான ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த பழனி (வயது 54), தயாளன் ஆககியோர் என்பதும், நெய்வேலி பகுதி மக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வேலூருக்கு கடத்திச் செல்ல முயன்றபோது போலீசில் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மினிலாரி மற்றும் அதில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன், மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்து வருகிறார்கள்.