குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வேலூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ரகசிய தகவல்
வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் பொய்கை மோட்டூர் பகுதியில் மர்மநபர்கள் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கடத்துவதாக விரிஞ்சிபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரன், ரவி, தனிப்பிரிவு போலீஸ்காரர் விஜயகுமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒதுக்குப்புறமான இடத்தில் கட்டிடம் ஒன்று இருந்தது. அதன் அருகே சரக்கு ஆட்டோவும் நின்றிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் அதன்அருகே சென்றனர். அப்போது அங்கிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றும் முடியவில்லை. அந்த சரக்கு ஆட்டோவில் ஏராளமான மூட்டைகள் இருந்தது. அதை போலீசார் பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. பின்னர் குடோனிலும் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது.
3 டன் ரேஷன் அரிசி
மொத்தம் 70 மூட்டைகளில் சுமார் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது. அரிசியையும், சரக்கு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வேலூர் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மர்மநபர்கள் வீடு, வீடாக சென்று ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்குகின்றனர். அதை மொத்தமாக சேர்த்து வைத்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்துகின்றனர். பொய்கை மோட்டூர் பகுதியில் ரகசியமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளனர். அந்த இடத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.