செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 3 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

Update: 2022-12-12 22:29 GMT

செம்பரம்பாக்கம்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

இதனால் நேற்று காலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மழை நீடிப்பதாலும், இந்த ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், நேமம் ஆகிய ஏரிகள் நிறைந்து அங்கிருந்தும் நீர்வரத்து அதிகரிப்பதன் காரணமாகவும் நேற்று மதியம் கூடுதலாக மேலும் ஆயிரம் கன அடி என 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.

3 ஆயிரம் கனஅடி திறப்பு

நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை ெதாடர்ந்து மழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்ததால் தண்ணீர் திறப்பு மேலும் ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. அதன்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 22.25 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,185 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 4,200 கன அடியாகவும் உள்ளது.

ஷெட்டரில் மோதும் தண்ணீர்

நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. காற்றின் வேகம் அதிகரிப்பதால் ஏரி நீரில் அலைகள் அதிக அளவில் எழும்பி மதகின் இரும்பு ஷெட்டரின் மீது மோதுவதால் மதகின் செட்டர் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 3 ஆயிரம் கன அடி உபரி நீரை ஐந்து கண் மதகில் 3 செட்டர்களின் வழியாக வெளியேற்றி வருகின்றனர். காற்றின் வேகத்தில் மதகின் ஷெட்டருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்க கூடும் எனவும் பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உபரி நீர் திறக்கும் போது காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக ஏரியின் செட்டர் சேதம் அடையும் சூழல் ஏற்பட்டதால் ஐந்து கண் மதகில் உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டு 19 கண் மதகில் 100 கனஅடி நீர் உபரி நீர் திறந்து விடப்பட்டது. தற்போது அதன்வழியாகவும் தொடர்ந்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்