வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல்
வேலூரில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைக்கு வாடகை பாக்கி வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வசூலிக்கவும், வாடகை பாக்கி செலுத்தாவிட்டால் அந்த கடைக்கு சீல் வைக்கவும் கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிகளவு வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி சீல் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட மக்கான் பகுதியில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி வைத்திருந்தவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனாலும் சிலர் வாடகை பாக்கி செலுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வருவாய் அலுவலர்கள், வருவாய் உதவியாளர்கள் லாரி நிறுத்தும் இடத்தில் உள்ள 3 கடைகளுக்கு சீல் வைத்தனர். இரவுநேரத்தில் கடைக்கு சீல் வைத்ததுக்கு அப்பகுதி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.