3 சாமி சிலைகள் கடலூர் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
சங்கராபுரத்தில் மீட்கப்பட்ட 3 சாமி சிலைகள் கடலூர் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது
கடலூர்
கொற்றவை சிலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பூட்டை கிராம ஆற்றங்கரையில், கடந்த 17.9. 2014 அன்று கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்த சிலை சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டது. பின்னர் இது பற்றி கடந்த 2016-ம் ஆண்டு கடலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா நேரில் சென்று அந்த சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அந்த கற்சிலை கொற்றவை சிலை என்று தெரிந்தது. அந்த சிலை 138 சென்டிமீட்டர் உயரமும், 44 சென்டி மீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது. மாட்டுத்தலையின் மீது நின்றவாறு இந்த சிலை இருந்தது. 8 கரங்களை கொண்டதாகவும், முன் 2 கரங்களும் இடுப்பின் மீது வைத்தவாறு உள்ளது. வலது மற்றும் இடது கரங்களில் ஆயுதங்களை ஏந்தியுள்ளது. கழுத்தில் கண்டிகை, சரப்பளி ஆகிய ஆபரணங்களை அணிந்தும், சுடர்முடி தலைக்கோலத்தில் சிலை காணப்படுகிறது. இந்த சிலை 6-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தேவி சிலை
இதேபோல் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே சித்தால் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, 13-ம் நூற்றாண்டை சேர்ந்த தேவி சிலை கண்டு எடுக்கப்பட்டது. இந்த சிலை 1½ அடி உயரம் இருந்தது. அந்த சிலை பீடத்துடன் 70 சென்டிமீட்டர் இருந்தது. இடது கை உடைந்த நிலையில் இருந்தது. வலது கை டோல ஹஸ்த நிலையில் இருந்தது. முகம் சிதைந்த நிலையிலும், பிரிநூல் இடது புறத்தில் இருந்து வலது புறமாக செல்கிறது. கழுத்தில் கண்டிகை, சரப்பளி ஆகிய ஆபரணங்களை அணிந்துள்ளது. காதுகளில் குண்டலங்கள் உள்ளது. கரண்ட மகுடம் அணிந்துள்ளது.
இது தவிர சங்கராபுரம் மோ.வன்னஞ்சூர், கோமுகி ஆற்றங்கரையோரம் கடந்த 3. 8.2016 அன்று ஒரு சாக்கு பையில் 1½ அடி உயரமுள்ள வைஷ்ணவி சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை 17-ம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த சிலை சதுரங்க பீடத்தின் மீது இடது காலை மடித்து, வலது கால் தொங்கிய நிலையில் சுகாசன நிலையில் இருந்தது. 4 கரங்களை கொண்டுள்ளது. முன் வலது கரம் அபய ஹஸ்தத்தையும், முன் இடது கரம் வரத ஹஸ்தத்தையும் கொண்டுள்ளது. பின் வலது கரம் சக்கரத்தையும், பின் இடது கரம் சங்கையும் ஏந்தியுள்ளது.
ஒப்படைப்பு
மீட்கப்பட்ட இந்த 3 சாமி சிலைகளையும் கடலூர் அரசு அருங்காட்சியத்தில் ஒப்படைக்க சங்கராபுரம் தாசில்தார் சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் பூட்டை கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ், கிராம உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் நேற்று கடலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னாவிடம் இந்த 3 சிலைகளையும் ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்த 3 சிலைகளும் கடலூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் வைக்கப்பட்டன. பல்வேறு தாமதங்களுக்கு இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சிலைகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.