பழைய பொருட்களை வாங்க 3 மறுசுழற்சி மையங்கள்

ஊட்டியில் பயன்பாடு இல்லாத பழைய பொருட்களை பொதுமக்களிடம் இருந்து வாங்க 3 மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

Update: 2023-05-23 22:00 GMT

ஊட்டி

ஊட்டியில் பயன்பாடு இல்லாத பழைய பொருட்களை பொதுமக்களிடம் இருந்து வாங்க 3 மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பழைய பொருட்கள்

தமிழகத்தில் பொதுமக்களிடம் உள்ள பயனற்ற பழைய பொருட்களை அவர்களிடம் இருந்து குறைத்தல் மற்றும் நமக்கு பயன்பாடற்ற பொருட்களை மறு பயன்பாடு செய்தல் அல்லது மறு சுழற்சி செய்தல் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் நகராட்சிகளில் குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி மையங்கள் ஆர்.ஆர்.ஆர். என்ற பெயரில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல் நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பயன்பாடற்ற பொருட்களை வழங்குவதற்காக ஊட்டி காந்தல் குருசடி காலனி, ஸ்டோன் ஹவுஸ் மற்றும் ஊட்டி மத்திய பஸ் நிலையம் என 3 இடங்களில் மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் தேவையற்ற பொருட்கள் தூக்கி எறியப்படுவது தவிர்க்கப்பட்டு, நகர் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும்.

மறுசுழற்சி மையங்கள்

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

இந்த திட்டத்தின் படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள புத்தகங்கள், கம்பளிகள், பழைய காலணிகள், ஆடைகள், வீட்டு பயன்பாட்டு மின்சாதன பொருட்கள் போன்றவற்றை மறு பயன்பாட்டிற்கு வழங்கலாம். பிளாஸ்டிக் பொருட்கள், மருந்து பாட்டில்கள், பொம்மைகள், பழைய பேப்பர்கள் போன்றவற்றை மறு சுழற்சிக்கு வழங்கலாம். ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள், வணிகர்கள், வணிக நிறுவனங்கள் தங்களிடம் உள்ள பொருட்களை இந்த மையங்களில் வழங்கலாம். பொதுமக்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையங்களுக்கு நேரில் வந்து வழங்கலாம். ஒருவேளை நேரில் வர முடியாதவர்கள் வார்டு பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம். இந்த திட்டத்திற்கு ஊட்டி நகரவாசிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேவையில்லாத பொருட்கள் இந்த மையத்திற்கு வந்த பின்னர், அந்த பொருட்கள் தேவைப்படுபவர்கள் இருந்தால் இங்கு வந்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்