புஞ்சைபுளியம்பட்டியில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் 3-வது குடிநீர் திட்டப்பணி; நகராட்சி கூட்டத்தில் துணைத்தலைவர் தகவல்

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் 3-வது குடிநீர் திட்டப்பணி தொடங்கப்பட உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம் கூறினார்.

Update: 2022-08-31 21:49 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் 3-வது குடிநீர் திட்டப்பணி தொடங்கப்பட உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம் கூறினார்.

ரூ.52 கோடி

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம், ஆணையாளர் முகமது உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பி.ஏ.சிதம்பரம் (துணைத்தலைவர்):- புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் ரூ.52 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் 3-வது குடிநீர் திட்டப்பணி 3 மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதில் நகராட்சி இடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் கட்ட எவ்விதமான அனுமதியும் பெறவில்லை. பத்திரப்பதிவு துறையில் இருந்து நிலத்துக்கு உரிய தொகை பெற ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரி பாக்கியை வசூலிக்க வேண்டும்

இதேபோல் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினருக்கு சத்தியமங்கலத்தில் அலுவலகம் உள்ள சூழ்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள பவானிசாகர் சட்டமன்ற அலுவலகத்தை நகராட்சி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும். நகராட்சியில் வரி வசூல் 18 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது. அதனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இதேபோல் நகராட்சி கடை வியாபாரிகளிடம் வாடகை பாக்கி ரூ.40 லட்சம் உள்ளது. அதனை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆணையாளர்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முரளி கிருஷ்ணன்(தி.மு.க.):- குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்கு நகராட்சி பணியாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஆணையாளர்: குப்பைகளை தரம் பிரித்து அளிக்க பொதுமக்களிடம் உரிய விழிப்புணர்வை மன்ற உறுப்பினர்கள் ஏற்படுத்த வேண்டும்.

16 தீர்மானங்கள்

பூரண ராமச்சந்திரன்(தி.மு.க.):- தினசரி சந்தையில் முந்தைய ஏலதாரரிடம் இருந்து வசூலிக்க வேண்டிய தொகையை உடனடியாக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் தினசரி சந்தை ஏலத்தை ரத்து செய்வது, குடிநீர் பராமரிப்பு, மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிக்கு தற்காலிக ஆட்களை நியமித்தல் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்