மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

திருவோணம் அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 போ், மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.

Update: 2023-06-18 20:41 GMT

ஒரத்தநாடு:

திருவோணம் அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 போ், மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.

3 பவுன் சங்கிலி பறிப்பு

திருவோணத்தை அடுத்துள்ள கீழமேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி பானுமதி (வயது65), இவர் மாடுகளை வளர்த்து பால் கறந்து குடும்பம் நடத்தி வருகிறார். பானுமதி தினந்தோறும் அதிகாலை பால் கறந்து அதனை கடைகளுக்கு நேரில் சென்று கொடுப்பது வழக்கம்.

அதன்படி நேற்று அதிகாலை சுமார் 5 மணிக்கு பால் கேனுடன் திருவோணம் கடைத்தெரு நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திருவோணம் அரசு ஆஸ்பத்திரி அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 பேர் பானுமதியை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

போலீசார் வலைவீச்சு

இதனால் பானுமதி அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.

இதுகுறித்து பானுமதி கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்