மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
தேனியில் மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேனி பழைய அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த தினகரன் மனைவி ஜீவரத்தினம் (வயது 66). நேற்று முன்தினம் அதிகாலையில் இவர், பங்கஜம் ஹவுஸ் தெருவில் உள்ள யோகாசன ஆலயத்தில் மார்கழி மாத பஜனையில் பங்கேற்க சென்றார். பஜனை முடிந்தவுடன் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிள் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி ஓடி வந்து ஜீவரத்தினம் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றார். இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் ஜீவரத்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.