கீரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் பணியிட மாற்றம்

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கீரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2022-10-03 18:26 GMT

கீரமங்கலம்:

பெண் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தை சேர்ந்த நீலகண்டன் மனைவி கோகிலா (வயது 36). வீட்டு பாதைப் பிரச்சினை புகார் சம்பந்தமாக கோகிலாவை கீரமங்கலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த 1-ந்தேதி கோகிலா அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தன்னை கைது செய்து தாலியை கழற்ற வைத்து விட்டனர். அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் இருந்து மீள முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்தார்.

மேலும் கோகிலாவின் சாவிற்கு காரணமான மேற்பனைக்காடு வடக்கு தி.மு.க. பிரமுகர் எம்.எம்.குமார், அவரது மனைவியும், போலீசுமான புவனேஸ்வரி, கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ெஜயக்குமார், பெண் போலீஸ் கிரேசி உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள், அரசியல் கட்சியினர், மேற்பனைக்காடு மற்றும் கீரமங்கலம் போலீஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் செய்தனர். மேலும் கோகிலாவின் கணவர் நீலகண்டன் கொடுத்த புகாரில் தனது மனைவி தற்கொலைக்கு காரணமான 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் கோகிலாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

கோட்டாட்சியர் விசாரணை

நேற்று முன்தினம் மாலை அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் முன்னிலையில் ஆஜரான கோகிலாவின் உறவினர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒத்துக் கொண்டனர். மேலும் புகாரில் குறிப்பிடப்பட்ட நபர்களை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறினார்கள். இந்தநிலையில் இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோகிலாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு பிறகு கோகிலாவின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்தனர். அப்போது அங்கு வந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், கோகிலாவின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட போலீசார், தி.மு.க. பிரமுகர் எம்.எம்.குமார் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

உடல் அடக்கம்

அப்போது இப்பிரச்சினை அறந்தாங்கி கோட்டாட்சியர் விசாரணையில் உள்ளதால் விசாரணை அடிப்படையில் வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை இருக்கும். அதற்கு கோகிலா எழுதியதாக வெளியாகி உள்ள கடிதத்தை அறந்தாங்கி கோட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று புதுக்கோட்டை கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவானது. இதனை கோகிலாவின் உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கோகிலாவின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர். அங்கு பாதுகாப்புக்காக ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்ரஜினி, கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

3 போலீசார் பணியிட மாற்றம்

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, கீரமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரை மீமிசல் போலீஸ் நிலையத்திற்கும், பெண் போலீசார் கிரேசியை மணமேல்குடி போலீஸ் நிலையத்திற்கும், புவனேஸ்வரியை நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்