தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

2 பேரை வெட்டிக்கொன்ற வழக்கில் தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.

Update: 2023-10-10 00:30 GMT

முன்விரோதம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா சேடப்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் (வயது 30). இவர் சென்னையில் தனியார் நிதிநிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், தாடிக்கொம்புவை சேர்ந்த செல்வராஜ் மகள் ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

பின்னர் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் கண்ணன் மீது செல்வராஜ் குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 18.5.2012 அன்று கண்ணன் சென்னையில் இருந்து ஊருக்கு வந்தார்.

இரட்டை கொலை

இதையடுத்து கண்ணனும், அவருடைய பெரியம்மா மகன் பெரியசாமியும் (31) சேடப்பட்டியில் இருந்து தாடிக்கொம்புக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு டாஸ்மாக் மதுக்கடை அருகே சென்ற போது இருவர் மீதும் சிலர் மிளகாய் பொடியை தூவினர். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பிவிட்டது.

இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் பெரியசாமி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஆயுள் தண்டனை

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வராஜ் (61), அவருடைய மகன் செல்வபாண்டி (32), உறவினர்களான முத்துகுமார் (43), தூங்கான் என்ற ஊராத்தேவர் (76), செல்வராஜின் மனைவி செல்வராணி (52), மகள் ராஜேஸ்வரி (35), முத்துக்குமார் மனைவி மாயக்காள் (36) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி மெகபூப்அலிகான் விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் சூசைராபர்ட் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட செல்வராஜ், செல்வபாண்டி, தூங்கான் என்ற ஊராத்தேவர் ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.23 ஆயிரம் அபராதமும், முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், மீதமுள்ள 3 பேரை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்