தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம்
தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம்
நாகப்பட்டினம்:
தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழில் முனைவோர்
தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள், முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை உருவாக்க புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்) செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுகிறது. நாகை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்கலாம்.
உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு 25 சதவீத (அதிகபட்சம் ரூ.50 லட்சம்) அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படும்.
3 சதவீதம் வட்டி மானியம்
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் திட்ட பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி இணையதளம் வழியாக வழங்கப்படும். வட்டி மானியம் கடன் பெறுபவர்களில் பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினரில் பெண்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் 5 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும்.
தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். பொதுப்பிரிவினர் 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர் 21 வயது முதல் 45 வயது வரை இருக்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்பவர்கள் தமிழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். எனவே நாகை மாவட்ட தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.