மதுபானம் விற்ற 3 பேர் சிக்கினர்
கடமலைக்குண்டு பகுதியில் மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடமலைக்குண்டு போலீசார் நேற்று கரட்டுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரட்டுப்பட்டி வைகை ஆற்றுபாலம் அருகே நின்று ஒருவர் மதுபானம் விற்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா (வயது 49) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 55 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், மூலக்கடை சுடுகாடு அருகே மதுபானம் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (38), மலைச்சாமி (40) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.