ஒரே மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேர் பலி

தனியார் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது..

Update: 2022-11-19 18:45 GMT

ராமநாதபுரம், 

தனியார் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது..

மோட்டார் சைக்கிளில் சென்றனர்

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை பகுதிையை சேர்ந்த மங்களம் என்பவருடைய மனைவி போதும் பொண்ணு (வயது 45). இவர் அங்குள்ள வராகி அம்மன் கோவில் பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருடைய அக்காள் மகன் கார்த்திக் (25). மானாமதுரை பர்மா காலனியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று கார்த்திக் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த அன்புவுடன் (23) மோட்டார் சைக்கிளில் உத்தரகோசமங்கையில் உள்ள சித்தி போதும் பொண்ணு வீட்டிற்கு வந்திருந்தார்.

அப்போது ராமநாதபுரம் சென்று மருந்து, மாத்திரைகள் மற்றும் கடைக்கு பூ வாங்கி விட்டு வருவோம் என்று போதும் பொண்ணு கூறியுள்ளார். இதை தொடர்ந்து சித்தி, தனது நண்பர் அன்பு ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கார்த்திக் ராமநாதபுரம் வந்துள்ளார். பொருட்கள் வாங்கிவிட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் உத்தரகோசமங்கை நோக்கி மீண்டும் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

3 பேர் பலி

களக்குடி பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற சரக்கு வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது முதுகுளத்தூரில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த தனியார் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இதில் சம்பவ இடத்திலேயே போதும் பொண்ணு, அன்பு ஆகியோர் பலியானார்கள். படுகாயம் அடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உத்தரகோசமங்கை போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரான மேலச்சிறுபோது கிராமத்தை சேர்ந்த திருநாகலிங்கத்தை (42) கைது செய்தனர். பலியான வாலிபர்கள் இருவரும் மானாமதுரையில் எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்