முயல்களை வேட்டையாடி சமூக வலைதளத்தில் பதிவு செய்த 3 பேருக்குஅபராதம்

முயல்களை வேட்டையாடி சமூக வலைதளத்தில் பதிவு செய்த 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

Update: 2023-07-11 20:15 GMT

பொள்ளாச்சி,

முயல்களை வேட்டையாடி சமூக வலைதளத்தில் பதிவு செய்த 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

முயல் வேட்டையாடுதல்

கோவை மண்டல வனம் மற்றும் வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவிற்கு பொள்ளாச்சி பகுதியில் முயல்களை வேட்டையாடி சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் பார்கவதேஜா மேற்பார்வையில் முயல் வேட்டையாடுபவர்களை பிடிக்க வனச்சரகர் புகழேந்தி மற்றும் வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவினர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையில் பொள்ளாச்சி அருகே கள்ளிப்பட்டி, கணக்கம்பட்டி பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

3 பேருக்கு அபராதம்

விசாரணையில் அதே பகுதிகளை சேர்ந்த சக்திவேல் (வயது 26), மாரிமுத்து (28), சின்னராசு (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் கடந்த வாரம் வேட்டை நாய்களை கொண்டும், சுருக்கு கம்பிகளை கொண்டும் பல்லடம், கோவில்பாளையம் பகுதிகளில் வயல்வெளிகளில் சுற்றி திரியும் முயல்களை வேட்டையாடியது தெரியவந்தது.

மேலும் வேட்டையாடப்பட்ட முயல்கள், சுருக்கு கம்பிகளையும், முயல்களை சமைத்து சாப்பிடுவது போன்று செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றமாகும். அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 3 பேருக்கும் மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புலிகள் காப்பக துணை இயக்குனர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்