வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது
கூடலூரில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
கூடலூர்,
கூடலூரில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
வனவிலங்குகள் வேட்டை
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளதால், வனக்குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கூடலூரில் வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது துப்புக்குட்டிபேட்டை பகுதியில் 3 பேர் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தனர். இதனால் அவர்களை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் தீவிர விசாரணை செய்த போது புள்ளிமான், காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்றது தெரிய வந்தது.
3 பேர் கைது
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கூடலூர் சளிவயலை சேர்ந்த ஆபிரகாம் (வயது 58), ஓவேலி பேரூராட்சி தருமகிரியை சேர்ந்த ஜோசப் (53), ஜேக்கப் (45) ஆகியோர் என்பது தெரிய வந்தது. பின்னர் கூடலூர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஆபிரகாம், ஜோசப், ஜேக்கப் ஆகிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில், 3 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வன குற்றங்களை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வன விலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.