திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-08-20 13:36 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நகை பறிப்பு

பழனி கவுண்டன்குளத்தை சேர்ந்த மனோகரன் மனைவி மஞ்சுளா (வயது 70). இவர், கடந்த 18-ந்தேதி வீட்டு வாசல் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பினர். இதேபோல் பழனி திருநகரை சேர்ந்த மாரி மனைவி ஆவுடையம்மாள் (77) வீட்டு முன்பு குப்பை கொட்ட வந்தபோது, மர்ம நபர்கள் 3 பேர் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து சென்றனர். பழனியில் அடுத்தடுத்து 2 மூதாட்டிகளிடம் நகைபறிப்பு நடந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவங்கள் தொடர்பான புகாரின் பேரில் பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரியவந்தது. அதையடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

3 பேர் சிக்கினர்

இந்த தனிப்படை போலீசார் பழனி நகர் மற்றும் சுற்றுப் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி கொடைக்கானல் சாலையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், திருச்சி மேலவண்ணாரப்பேட்டையை சேர்ந்த நாகராஜ் மகன் ரபீக் என்ற யாபேஸ்ராஜா (19), பிச்சமுத்து மகன் ராஜலிங்கம் (19) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அவர்கள் பழனி, திண்டுக்கல், தாடிக்கொம்பு உள்பட திண்டுக்கல் மாவட்டத்தின் பகுதிகளில் சாலையில் தனியாக வரும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 17 பவுன் நகை மற்றும் 1 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்