மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபர்

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபர் தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2023-04-25 19:50 GMT

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபர் தற்கொலைக்கு முயன்றார்.

நடத்தையில் சந்தேகம்

விருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தை சேர்ந்த பெண் சந்தனமாரி (வயது 28). இவருடைய தங்கை நாகப்பிரியா (24).

இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. அருகருகே வசித்து வருகின்றனர்.

நாகப்பிரியாவின் கணவர் கணேசன் (28). இந்தநிலையில், நாகப்பிரியாவுக்கும் அருகில் வசிக்கும் அருணாசலம் மகன் மாரீசுவரனுக்கும் பழக்கம் இருப்பதாக சந்தேகப்பட்டு நாகப்பிரியாவுடன் அவருடைய கணவர் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சந்தனமாரியும், அவருடைய கணவர் ஆறுமுகமும் கண்டித்துள்ளனர்.

சம்பவத்தன்று அதிகாலை கணேசன், நாகப்பிரியாவிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். பின்னர், மாரீசுவரன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த அவருடைய தந்தை அருணாசலம், அவருடைய மற்றொரு மகன் மாரியப்பனையும் அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்து கணேசன் தப்பி ஓடிவிட்டார்.

தற்கொலைக்கு முயற்சி

படுகாயமடைந்த நாகப்பிரியா உள்பட 3 பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுபற்றி சந்தனமாரி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் கணேசன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இதற்கிடையே கணேசன் செங்கோட்டையில் உள்ள மயானத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த கணேசனின் தந்தை சவுந்திர பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த கணேசனை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். இது பற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்