வெவ்வேறு சம்பவங்களில் கார் டிரைவர் உள்பட 3 பேர் சாவு
வெவ்வேறு சம்பவங்களில் கார் டிரைவர் உள்பட 3 பேர் இறந்தனர்.
வெவ்வேறு சம்பவங்களில் கார் டிரைவர் உள்பட 3 பேர் இறந்தனர்.
கார் டிரைவர்
திருச்சி தென்னூர் சத்யா நகரை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். இவரது மகன் பாபு (வயது 23). கார் டிரைவர். இவர் மண்ணச்சநல்லூரில் உள்ள சகோதரர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கனிஷ்காஸ்ரீ (2) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் பாபு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் வந்து படுத்துள்ளார். அப்போது, கட்டிலில் இருந்து விழுந்த அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் தற்கொலை
உப்பிலியபுரத்தை அடுத்த சிக்கத்தம்பூர் ஊராட்சி ஒட்டம்பட்டி பஜனைமடத்தெருவை சேர்ந்தவர் மூக்கன். இவரது மனைவி செல்வம் (41). தலைவலியால் அவதி அடைந்த அவர் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாபாரி சாவு
சென்னை வில்லிவாக்கம் திருநகரை சேர்ந்தவர் செந்தில் (வயது 49). இவர் திருச்சி புத்தூர் குமரன்நகர் பேங்கர்ஸ் காலனியில் வசித்து வந்தார். இவர் தனது நண்பரான தனசேகருடன் சேர்ந்து அதேபகுதியில் வாகனத்தில் தோசை கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செந்தில் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி புவனேஸ்வரி அளித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.