விஷவாயு தாக்கி புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி
ஸ்ரீமுஷ்ணம் அருகே செப்டிக் டேங்க் குழிக்குள் அமைக்கப்பட்ட சாரத்தை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் பலியாகினர்
ஸ்ரீமுஷ்ணம்
வீடு கட்டும் பணி
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் மாஞ்சோலையை சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 40). இவரது மனைவி காயத்ரி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தச்சு வேலை பார்த்து வந்த கிருஷ்ணமூர்த்தியுடன் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசலை சேர்ந்த அவரது மாமா மகன் சக்திவேல் (22) என்பவரும் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அதே பகுதியில் தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறார். இதில் கானூரை சேர்ந்த கொத்தனார் பாலச்சந்திரன் (32) என்பவர் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் வீட்டின் அருகே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டிக் டேங்க் கட்டப்பட்டது.
சாரம் அகற்றும் பணி
இதில் செப்டிக் டேங்க் மேற்பகுதியில் கான்கிரீட் போடுவதற்காக, செப்டிக் டேங்க் குழிக்குள் சாரம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சாரத்தை அகற்றுவதற்காக நேற்று மாலை 6 மணி அளவில் கிருஷ்ணமூர்த்தி, பாலச்சந்திரன், சக்திவேல் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக செப்டிக் டேங்க் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய துளை வழியாக உள்ளே இறங்கினர்.
இந்த நிலையில் செப்டிக் டேங்க் குழிக்குள் இறங்கிய மூன்று பேரும் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தியின் தாய் சரஸ்வதி குழிக்குள் எட்டிப் பார்த்தார்.
3 பேர் பலி
அப்போது 3 பேரும் மயங்கி கிடப்பதை பார்த்த அவர் கூச்சலிட்டார். உடனே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் செப்டிக் டேங்க் குழியை உடைத்தனர். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் வீரமணி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் செப்டிக் டேங்க் குழிக்குள் கிடந்த 3 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது 3 பேரும் விஷவாயு தாக்கி இறந்தது தெரியவந்தது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து விஷ வாயு தாக்கி பலியான 3 பேரின் உடல்களையும் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலியான பாலச்சந்திரனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் அம்மன் ராணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.