காட்டுப்பன்றியை வேட்டையாடிய அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
கன்னிவாடி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கன்னிவாடி வனசரகத்திற்கு உட்பட்ட நீலமலைக்கோட்டையில் காட்டுப்பன்றியை வேட்டையாடி, தனியார் தோட்டத்தில் வைத்து கறியை சமைப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கன்னிவாடி வனத்துறை அதிகாரிகள் ஆறுமுகம், வெற்றிவேல், வனகாவலர்கள் ஜீவானந்தம், ராம்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட தனியார் தோட்டத்துக்கு சென்றனர்.
அப்போது அங்கு 3 பேர் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் நீலமலைக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 34), அவரது தம்பி கவியரசு (31), அதே ஊரை சேர்ந்த நாச்சியப்பன் (53) என்பதும், 3 பேரும் சேர்ந்து காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை சமைத்ததும் தெரியவந்தது.
வனத்துறை அதிகாரிகள் வரும்போது, 3 பேரும் காட்டுப்பன்றி இறைச்சியை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.