இரவில் காரில் சென்று வீடுகளில் கொள்ளையடித்த பெண் உள்பட 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பகலில் இருசக்கர வாகனங்களில் ெஹல்மெட் அணிந்து நோட்டமிட்டு, இரவில் காரில் சென்று வீடுகளில் கொள்ளையடித்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 35 பவுன் நகை, 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-02-01 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கொள்ளையர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் புதூர் கூட்டுசாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதில் ஒரு பெண் உள்பட 3 பேர் இருந்தனர். விசாரணையின்போது அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று துருவி, துருவி போலீசார் விசாரணை நடத்தினர்.

சொகுசு வாழ்க்கை

விசாரணையில் அவர்கள், சென்னை பெரம்பூர் புது காலனியை சேர்ந்த கோபி மகன் கார்த்திக் (வயது 19), சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த ராஜசேகர் மகன் பாலாஜி (வயது 23), யுவராஜ் மனைவி சிந்து (வயது 23) ஆகியோர் என்பதும், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, மூங்கில்துறைப்பட்டு, தியாகதுருகம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. கொள்ளையடித்ததன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து ஆடம்பர பொருட்களை வாங்கி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததோடு நிலமும் வாங்கியுள்ளனர்.

நகை, வாகனங்கள் பறிமுதல்

இதற்காக 3 பேரும் பகண்டை கூட்டுரோடு, எஸ்.வி.பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து முகாமிட்டதும், பகலில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று பூட்டி கிடக்கும் வீடுகள் மற்றும் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, இரவில் காரில் சென்று கொள்ளையடித்ததும் தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 35 பவுன் நகை, கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திக், பாலாஜி, சிந்து ஆகிய 3 பேர் மீது சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவ வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்