கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

கரூர் அருகே கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-17 18:30 GMT

கூட்டுறவு வங்கி ஊழியர்

கரூர் அருகே உள்ள வாங்கல் குப்புச்சிபாளையம் கோம்பன் காட்டான்தோட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கவுசல்யா (வயது 32). தங்கராஜ் கடந்த 8 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு கனிஷ்கா, வர்ஷித் என 2 குழந்தைகள் உள்ளனர். கவுசல்யா வாங்கல் குப்புச்சிபாளையம் தொடக்க கூட்டுறவு வங்கியில் உதவி அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார்.இந்தநிலையில் கவுசல்யா சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு தாயார் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்து கொண்டு சென்று விட்டார். இந்தநிலையில் கவுசல்யா நேற்று முன்தினம் தனது குழந்தைகள் மற்றும் தந்தையுடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

பொருட்கள் திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது வீட்டுக்்குள் இருந்த எல்.டி.டிவி, மின்சார அடுப்பு, செல்போன் உள்பட சுமார் ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கவுசல்யா வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

விசாரணையில், பொருட்களை திருடி சென்றது விருதுநகர் மாவட்டம், கொங்கலபுரம் ஜக்கம்மாள் காலனியை சேர்ந்த காளிதாஸ் (24), வாங்கல் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(19), சதீஷ் மற்றும் 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காளிதாஸ், மணிகண்டன், 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சதீசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்