தாய்-மகன் உள்பட 3 பேர் சாவு

மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிக்கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் மீது லாரியும், காரும் மோதியதால் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-09-25 19:35 GMT

மேச்சேரி:-

மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிக்கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் மீது லாரியும், காரும் மோதியதால் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள பண்ணப்பட்டி மாட்டுக்காரன் புதூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 42). இவருடைய மனைவி அன்னபூரணி (வயது 40). இவர்களுடைய மகன் மைதீஷ் (12). இவர்கள் 3 பேரும் மேட்டூர் முனியப்பன் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை மேச்சேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

மேட்டூர் சுப்பராயன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). இவர் மேட்டூரில் இருந்து மேச்சேரி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மேச்சேரி அருகே பொட்டனேரி நான்கு ரோடு பகுதியில் வந்த போது ராஜேந்திரன் ஓட்டி வந்த மொபட்டும், மூர்த்தியின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் மூர்த்தியின் குடும்பத்தினர் மற்றும் ராஜேந்திரன் ஆகிய 4 பேரும் சாலையில் விழுந்தனர்.

3 பேர் சாவு

இவர்கள் மீது அந்த வழியாக வந்த லாரியும், காரும் மோதியதாக தெரிகிறது. இதில் அன்னபூரணி, அவருடைய மகன் மைதீஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். மூர்த்தி லேசான காயம் அடைந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான தாய்-மகன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மூர்த்தியையும், ராஜேந்திரனையும் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

டிரைவர்களிடம் விசாரணை

விபத்து தொடர்பாக லாரி, கார் பறிமுதல் ெசய்யப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி, கார் டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிக்கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்