ஓசூர்:-
மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பெண்
ஊத்தங்கரை தாலுகா மிட்டப்பள்ளி அருகே கொட்டுகாரம்பட்டியை சேர்ந்தவர் ரேணு. இவருடைய மனைவி காசி (வயது 50). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டைபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூலித்தொழிலாளிகள்
ஓசூர் தாலுகா நந்திமங்கலம் அருகே எம்.காரப்பள்ளியை சேர்ந்தவர் கஜேந்திரன் (55). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 3 மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். மன உளைச்சல் காரணமாக கடந்த 9-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி தாலுகா ஜோகிர்பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (54). கூலித் தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 10-ந் தேதி மாலை அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.